தமிழ் தமிழனுக்கு உயிர் மூச்சு!
ஆங்கி லம் என்பது ஒரு மொழி; அது அறிவு அல்ல! ஆங்கிலத்தில் வேகமாகப் பேசுபவர்கள் எல்லாம் அறிவாளிகள் இல்லை.இங்கிலாந்திலும் அமெரிக்காவிலும் ஆங்கிலத்தை அழகாகவும் வேகமாகவும் பேசும் மக்களில் பலர் எழுதப் படிக்கத் தெரியாதவர்கள் என்னும் உண்மையை நம் தமிழர்கள் உணரத் தவறி விட்டனர்.
தமிழனுக்கு ஆங்கிலம் ஒரு கூடுதலான அயல்மொழி. தமிழில் பேசினால் புரிந்து கொள்ள முடியாத பிற மாநில மக்களிடம் பேசுவதற்கும் ஆங்கில மொழியில் எழுதப்பட்டுள்ள புத்தகங்களிலிருந்து தகவலைப் பெறுவதற்கும் உதவுகின்ற ஒரு கூடுதலான மொழிதான் ஆங்கிலம். தமிழனுக்கு ஆங்கிலம் தெரிந்திருப்பதின் பயன் அவ்வளவே!
ஆனால், தமிழனுக்குத் தமிழ் அப்படியல்ல! அவன் தாயின் மடியில் பச்சிளங்குழந்தையாகத் தவழ்ந்து தாய்ப்பால் குடிக்கும் போது முதலில் கேட்ட மொழி தமிழ்! தமிழ் மொழியானது உலகின் மூத்த மொழிகளுள் ஒன்று. தொன்மையான தமிழினத்தின் புகழ்மிக்க அடையாளம்; தாய்மொழி தமிழ் தமிழனின் அறிவுப் பெருக்கத்திற்கு ஊற்றுக்கண்!
தமிழ்தான் தமிழ்க் குழந்தைகளின் இனிய கற்பனைக்கும் புதிய சிந்தனைக்கும் அடித்தளம். குழந்தைகளின் அறிவுக்கும், அவர்களது கண்டுபிடிப்புகளுக்கும் தமிழ்தான் திறவுகோல். தேனினும் இனிய தமிழ்தான் அவர்களது படைப்பாற்றலுக்கு உயிர்நாடி. தமிழ்தான் தமிழ்க் குழந்தைகளின்பேச்சும் மூச்சும்!
தமிழ்க் குழந்தைகள் ஆங்கிலத்தை ஒரு மொழியாகக் கற்கலாம். எத்தனை பிற மொழிகளையும் பேச்சு மொழியாகக் கற்கலாம்; அது வரவேற்கத்தக்கது. ஆனால், தாய்மொழி தமிழைப் புறந்தள்ளிவிட்டுஆங்கில மொழியின் வழியே பள்ளிப் பாடங்களைத் தமிழ்க் குழந்தைகள் கற்பதை ஒருபோதும் விரும்பி ஏற்க இயலாது. அதற்குத் துணையாக நிற்கும் பள்ளிகளையும் கல்வி முறையையும் எக்காரணங்கொண்டும் வரவேற்க இயலாது. ஏனெனில், அச்செயல் தமிழர்களின் உயர் சிந்தனைகளையும் அவர்களது புதிய அறிவியல் தொழிநுட்ப கண்டுபிடிப்புகளுக்கான முயற்சிகளையும் வளரவிடாமல் கொஞ்சம் கொஞ்சமாக முற்றிலும் சிதைத்து விடும்.
தமிழ்மொழி அழிந்து வருகிறதா?
இன்று, தமிழ்ப்பெரு நிலத்தில் தமிழனின் பண்பாட்டுப் பொதுவெளிகளில் தமிழ்மொழி வேகமாக அழிந்து வருகிறது. நகர்ப்புறங்களில் பெரும்பாலான படித்த பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளிடம் வீட்டில் ஆங்கிலத்திலேயே பேசுகின்றனர்; தமிழில் பேசுவதில்லை. படித்தவர்களில் பெரும்பாலானவர்கள் தாங்கள் பணிபுரியும் அலுவலகங்களில் ஆங்கிலத்திலேயே பேசிக்கொள்கின்றனர்; தமிழில் பேசிக்கொள்வதில்லை.
நண்பர்கள் தங்களுக்குள் பொதுவான விஷயங்களை உரையாடும் போது கூட ஆங்கிலத்திலேயே உரையாடி மகிழ்கின்றனர். பெரும்பாலான தமிழர்கள் திருமண அழைப்பிதழ்களை ஆங்கிலத்திலேயே அச்சடிக்கின்றனர்; தமிழில் அச்சடிப்பதில்லை. அவர்கள் தங்களது அலைபேசி எண்களைப் பிறரிடம் குறிப்பிடும்போது கூட, ஆங்கிலத்திலேயே சொல்கின்றனர்; தமிழில் சொல்வதில்லை.
பல கடைகளின் பெயர்ப் பலகைகள் ஆங்கிலத்திலேயே உள்ளன தமிழில் இல்லை. சிற்றூர் செல்லும் பேருந்து வழித்தடங்களின் பலகைகளில் கூட ஆங்கிலமே முந்திக்கொண்டு நிற்கிறது. தமிழ் மொழியைப் போற்றிக் காக்க வேண்டிய பள்ளிகளில், குழந்தைகள் தமிழையும் ஆங்கிலத்தையும் இரண்டறக் கலந்து பேசும் “கலப்பு மொழிக் குழந்தைகளாகவே” வளர்கின்றனர். தமிழில் பேசும் குழந்தைகள் பள்ளிகளில் அருகி வருகின்றனர்.
மாணவர்களுக்கு முன்மாதிரியாகத் திகழவேண்டிய ஆசிரியர்களும் தூய்மையான தமிழைப் போற்றுவதுமில்லை; கலப்பில்லாத தூய்மையான தமிழில் பேசுவதுமில்லை. தமிழ்ப் பெருநிலத்தில் தமிழன் இருக்கிறான். ஆனால், அவனிடமிருந்து அமிழ்தினும் இனிய தமிழ் கொஞ்சம் கொஞ்சமாக விலகிப் போய்க்கொண்டிருக்கிறது.
வாழ்த்துவோம் தமிழை ..!
ஒரு மொழியில் வாசிப்பதும் எழுதுவதும் எப்போது குறைகின்றதோ, அப்போதே அம்மொழி அழிவுப் பாதையில் அடியெடுத்து வைத்துவிட்டது எனக் கூறலாம்.
ஒரு மொழியில் வாசிப்பதும் எழுதுவதும் குறையும்போது, அம்மொழியில் பேசுவோரது எண்ணிக்கையும் மெல்ல மெல்ல குறைந்து விடும்; காலப்போக்கில் அம்மொழியானது பேசுவதற்கு ஆளில்லாமல் அநாதையாகும்;அடுத்து அழிந்தும் போகும்!
ஒரு மொழியைக் கோடிக் கணக்கான மக்கள் பேசினாலும், அம்மொழியை வாசிக்கவோ, எழுதவோ மக்களுக்குத் தெரியாமல் போனால், அம்மொழி விரைவில் அழிந்து போய்விடும்.ஒரு மொழியினை 100 பேர் மட்டுமே தொடர்ந்து பேசவும் வாசிக்கவும் எழுதவும் செய்தால் கூட, அம்மொழியானது உலகில் அழியாத மொழியாக நின்று நிலவும்.
பள்ளிகளில் தமிழ்மொழியின் இன்றைய நிலை!
பள்ளிகளில் தமிழ்மொழியின் இன்றைய நிலை மிகவும் மோசமாகி வருகிறது. குறிப்பாக, ஆங்கிலமொழி வழியாகப் பாடங்களைக் கற்பிக்கும் தனியார் தொடக்கப் பள்ளிகளில், தமிழ் மொழி கற்பிக்கும் ஆசிரியர்கள் குழந்தைகளின் இயல்பையும், தமிழின் இனிமையையும் புரிந்துகொண்டு, எளிமையாக கற்பிக்கத் தவறிய காரணத்தால், அத்தகைய பள்ளிகளில் எட்டாம் வகுப்பு பயிலும் மாணவர்கள் கூடத் தமிழை வாசிப்பதற்குத் திணறுகின்றனர்; அவர்கள் மிகுந்த பிழைகளுடன் எழுதுகின்றனர்.
உலகின் தொன்மையான மொழியெனச் சிறப்புடன் புகழக்கூடிய தாய்மொழி தமிழை அழிவு நிலைக்குத் தள்ளாமல் பாதுகாத்து, இந்த நூற்றாண்டில் மட்டுமல்ல, வருகின்ற எல்லா நூற்றாண்டுகளிலும் செங்கோலோச்சும் மொழியாகத் தமிழ் திகழவேண்டுமெனில், ஒவ்வொரு தமிழ்க் குழந்தையும் தாய்த் தமிழை நன்கு பேசவும், வாசிக்கவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். அதை வென்றடைய ஒவ்வொரு மழலையர் தொடக்கப் பள்ளியும் தமிழையும் தமிழினத்தையும் காக்கும் கோயிலாகத் திகழவேண்டும். அவை தொடர்ந்து கோயில் திருப்பணி போலத் தமிழ்ப் பணியாற்றும் மேன்மை நிலைக்கு விரைவில் மாறவேண்டும்.
“தமிழா..! தமிழ் படி..!” இணையதளத்தின் உன்னத நோக்கம், இந்த நூற்றாண்டில் தொடக்கப்பள்ளிகளில் பயிலும் தமிழ்க் குழந்தைகளுக்கு, எளிய இனிய முறையில் தமிழ் மொழியை நன்கு பேச, வாசிக்க, எழுதக் கற்றுத் தருவதும், அமிழ்தினும் இனிய தமிழினை அதன் சுவை குன்றாமல் பாதுகாத்து, அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு வழங்குவதும் ஆகும். இயல்பாகவே தமிழனுக்கு அறிவு உள்ளது. அவனிடம் பிறர் வியக்கும் அளவுக்கு அறிவு கூடுதலாகவே உள்ளது. இன்று அவனுக்கு எது இல்லை? தமிழையும் தமிழினத்தையும் போற்றிப் பாதுகாக்க வேண்டும் என்னும் மனநிலை – மனப்பான்மை – உணர்வு மங்கி வருகிறது. தமிழ், தமிழ் மக்கள், தமிழ்நாடு என்னும் பேருணர்ச்சியை மங்கவிடாமல் செய்யும் தமிழ்ப் பணியைச் செய்வதற்கே “தமிழா..! தமிழ் படி..!” என்னும் இத் தனித்துவமான இணையதளம்!