இனி, குழந்தைகளுக்குத் தமிழை இனிக்க இனிக்கக் கற்பிக்கலாம்!

இனி, குழந்தைகளுக்குத் தமிழை இனிக்க இனிக்கக் கற்பிக்கலாம்!

ஒரு குழந்தை தனது தாய்மொழியை எப்படிக் கற்றுக்கொள்கிறது? முதலில் குழந்தை தாய்மொழிச் சொற்களைக் காதால் கேட்கிறது. காதில் கேட்கும் சொற்களைப் பேசிப் பழகுகிறது. இதுதான், ஒரு குழந்தை தனது தாய்மொழியை இயல்பாகக் கற்கும் முறை.
ஒரு குழந்தை பள்ளியில் சேரும் போது அக்குழந்தைக்குப் பேசத் தெரியும். ஆசிரியர் சொல்வதைக் கேட்டுப் புரிந்துகொள்ள முடியும். குழந்தைக்கு எது தெரியாது? தமிழை வாசிக்கத் தெரியாது; எழுதத் தெரியாது. குழந்தைக்கு இந்த இரண்டு மட்டுந்தான் தெரியாது. ஆனால், பள்ளியில் சேரும் தமிழ்க் குழந்தைக்கு ஆங்கில மொழியில் பேசத் தெரியாது; பேசுவதைக் கேட்டாலும் புரியாது; வாசிக்கத் தெரியாது; எழுதவும் தெரியாது. ஏனெனில், தமிழ்க் குழந்தைகளுக்கு ஆங்கிலம் இரண்டாவது மொழி.

ஏன் குழந்தைகள் வாசித்தும் எழுதியும் பழக வேண்டும்?
பள்ளிகள் தமிழ்க் குழந்தைகளுக்குத் தமிழில் வாசிக்கவும், எழுதவும் கற்றுத் தர வேண்டும்.
குழந்தைகள் ஏன் வாசிக்க வேண்டும்? புத்தகங்களை வாசிப்பதால் குழந்தைகளிடம் அறிவு பெருகுகிறது. புத்தகங்களில் படிக்கும் கருத்துக்களால் குழந்தைகளிடம் அறிவு மிளிரத் தொடங்குகிறது.
குழந்தைகள் ஏன் எழுத வேண்டும்? நல்ல நூல்களைப் படிக்கும் குழந்தைகளின் மனத்தில் புதிய சிந்தனைகள் உதிக்கின்றன. புதிய கருத்துக்கள் பிறக்கின்றன. மனத்தில் உதித்த கருத்துகள் மறக்காமலிருக்க அவற்றை எழுதிப் பதிவு செய்து பத்திரப்படுத்த வேண்டியதாகிறது. குழந்தைகளின் உள்ளத்தில் ஊறும் கருத்துக்களைப் படைப்பதற்கு எழுத்தாற்றலை வளர்க்க வேண்டியதாகிறது. இந்த இரண்டுக்காகத்தான் ஆசிரியர்கள் பள்ளிகளில் தமிழை ஒரு பாடமாகக் கற்றுத் தருகின்றனர்.

இன்று பள்ளிகளில் தமிழ் எதற்காகக் கற்றுத் தரப்படுகிறது?
இன்று பள்ளிகளில் தமிழ் கற்பிப்பதின் நோக்கம் மிகவும் சுருங்கிப் போய்விட்டது. தேர்வுக்கான கேள்வி பதில்களை மனப்பாடம் செய்வதற்காக வாசிக்கத் தெரிய வேண்டும். மனப்பாடம் செய்ததை தேர்வுத்தாளில் எழுதுவதற்காக எழுதத் தெரிய வேண்டும். குழந்தைகள் வாசித்து அறிவைப் பெருக்கி, புதிய படைப்புகளைப் படைக்கவேண்டும் என்ற உண்மையான நோக்கம் பள்ளிகளில் காணாமல் போய்விட்டது. இந்நிலை தமிழுக்கும் தமிழ்க் குழந்தைகளுக்கும் பேரபாயத்தைக் கொடுத்துவிடும்.

நல்ல தமிழ்க் கற்பித்தல் முறை எது?
நல்ல கற்பித்தல் முறை என்பது குழந்தைக்கு என்ன தெரியுமோ, அதிலிருந்து தொடங்குவதுதான் சரியான கற்பித்தல் முறை. நல்ல ஆசிரியரும் அப்படித்தான். குழந்தைக்கு என்ன தெரியுமோ அங்கிருந்து கற்பிக்கத் தொடங்குபவர்தான் குழந்தைகள் மனம் விரும்பும் வகையில் கற்பிக்கும் சிறந்த ஆசிரியர்!

இன்று பள்ளிகளில் தமிழ் எவ்வாறு சொல்லித் தரப்படுகிறது?
பெரும்பாலான மழலையர், தொடக்கப் பள்ளிகளில் தமிழ் தவறாகவே சொல்லித் தரப்படுகிறது. பொதுவாக, ஆசிரியர்கள் மழலையர் பள்ளிகளில் முதலில் எழுத்துக்களை எழுதச் சொல்லியே தமிழைக் கற்பித்து வருகின்றனர்.

எந்த வகுப்பில் பார்த்தாலும் ‘அ – ஆ – இ – ஈ’ என எழுத்துக்களையே முதலில் சொல்லித் தருகின்றனர். வாசித்துப் பழகுவதற்கு முன் குழந்தைகளுக்கு எழுதக் கற்றுத் தருவது தவறான கற்பித்தல் முறையாகும்.

ஆசிரியர்கள் எழுத்தை ஏன் முதலில் கற்பிக்கின்றனர்?
நமது கல்வி முறை தேர்வுக்கு முதலிடம் தருகிறது. தேர்வுகள் எழுத்து வழியாக நடத்தப்படுவதால், ஆசிரியர்கள் எழுதுவதற்கும் தெளிவான கையெழுத்திற்கும் கற்பிக்கும் போது அதிக முக்கியத்துவம் தருகின்றனர்.

இன்றைய கல்வி முறையானது, “நோட்டில் எழுது-நோட்டில் எழுதியதை மனப்பாடம் செய் – மனப்பாடம் செய்ததை தேர்வுத்தாளில் எழுது – தேர்வுத்தாளில் எழுதியதைச் சில நாட்களில் மறந்துவிடு” என்கிற அளவில் தான் உள்ளது.

தமிழைக் கற்பிக்க எது சரியான முறை?
தமிழைக் குழந்தைகளுக்கு இனிக்க இனிக்க மழலையர் பள்ளிகளில் சொல்லிக் கொடுக்கலாம்.  எப்படி? முதலில், குழந்தைகள் கற்கவேண்டிய தமிழ்ச் சொற்களைச் சிறிய எளிய பாடல் வடிவில் கேட்டு மகிழ வேண்டும்.

எடுத்துக்காட்டாக, ‘கொக்கு, கோழி, குருவி, மைனா’ என்னும் நான்கு சொற்களைக் குழந்தைகள் பார்த்து வாசிக்கவும், பார்க்காமல் எழுதவும் வேண்டும் என வைத்துக்கொள்வோம். அதை எப்படிக் கற்பிப்பது?

முதலில், குழந்தைகளுக்கு அச்சொற்களைக் கீழேயுள்ளதைப் போல ஒரு சிறிய எளிய பாடல் வடிவில் ஆசிரியர் சொல்ல வேண்டும்.  குழந்தைகள் கேட்டு மகிழ வேண்டும்.

கொக்கு  பறபற
கோழி   பறபற
குருவி பறபற
மைனா  பறபற

இரண்டாவதாக, ஆசிரியர் பறவைகளின் படங்களைக் காட்டியோ, காட்டாமலோ, அப்பறவைகளின் பெயர்களை ஆசிரியர் வாயால் எழுத்துக் கூட்டிக் குழந்தைகளிடம் சொல்லவேண்டும். எப்படி?

கொ– க் – கு  கொக்கு
கோ– ழி  கோழி
கு – ரு –வி  குருவி
மை– னா  மைனா

ஆசிரியர் சொல்வதைக் குழந்தைகள் கவனித்து மகிழ வேண்டும். (ஆசிரியர் எழுதிக் காட்டக்கூடாது).

ஆசிரியர் பறவைகளின் பெயர்களை எப்படி வாயால் எழுத்துக்கூட்டிச் சொன்னாரோ, அப்படியே குழந்தைகளும் சொல்லவேண்டும்.  குழந்தைகள் எளிதாக வாயால் எழுத்துக் கூட்டிச் சொல்லி மகிழ்வர்.

மூன்றாவதாகஆசிரியர் கீழேயுள்ளவாறு கொட்டை எழுத்துக்களில் ஒரு வாசிப்பு அட்டையைத் தயாரிக்க வேண்டும்.

கொக்கு  கோழி
குருவி  மைனா

ஆசிரியர் இரண்டு குழந்தைகளைஅழைத்துத்தன் அருகில் நிற்க வைத்து, அட்டையிலுள்ள சொற்களை “கொக்கு கோழி”, “குருவி மைனா” எனச் சுட்டு விரலால் தொட்டுத்தொட்டுச் சொற்களை வாசித்துக்காட்ட, குழந்தைகளும் அவ்வாறே வாசிக்க வேண்டும்.

குழந்தைகள் மனம் மகிழும் வகையில் எப்படிஎழுத்துக்களைக் கற்றுத் தருவது?
எந்தச் சொற்களைக் குழந்தைகள் வாசிக்குமோ அதைத்தான் குழந்தைகளுக்கு எழுதிப் பழக்க வேண்டும். இப்போது குழந்தைகள் ‘கொக்கு கோழி’, ‘குருவி மைனா’என்பதைநன்குவாசித்துக்காட்டக் கூடியவர்களாக இருப்பர்.

முதலில் ஆசிரியர் ‘கொ– க் – கு’, ‘கோ– ழி’ என ஒவ்வோர் எழுத்தையும் உச்சரித்துக் கொண்டே அதை எவ்வாறு எழுதுவது  எனச் சிலேட்டிலோ தாளிலோ எழுதிக் காட்ட வேண்டும். (மழலையர் பள்ளிகளில் தொடக்கத்தில் சிலேட்டில் எழுதிக் காட்டுவது சிறப்பு.)

அடுத்து, ஆசிரியர் அச்சொற்களைக் கரும்பலகையில் / சிலேட்டில் எழுதிக் காட்ட வேண்டும் (அட்டையிலுள்ள சொற்களையும் காட்டலாம்). அதைப் பார்த்துக் குழந்தைகள் சிலேட்டில் / தாளில் எழுதிப் பழக வேண்டும் (குழந்தைகள் எழுதியதை ஆசிரியர் திருத்த வேண்டும்).

கற்றதை எப்படிச் சோதிப்பது?
இப்பொழுது குழந்தைகள் 4 சொற்களை வாசிக்கவும் எழுதவும் கற்றிருப்பர் எனச் சொல்லலாம். உண்மையில், குழந்தைகள் 4 சொற்களையும் கற்றார்களா என்பதை ஆசிரியர் சோதித்தறிய வேண்டும். எப்படிச் சோதிப்பது?

ஆசிரியர் குழந்தைகள் படித்த சொற்களை (கொக்கு, கோழி, குருவி, மைனா என) ஒவ்வொன்றாக வாயால் சொல்ல வேண்டும். குழந்தையானது தன் உள்ளங்கையில் வலது கை சுட்டு விரலைக் கொண்டு ஒவ்வொரு சொல்லாக எழுதி மகிழும்.

பின்னர், ஆசிரியர் அதே சொற்களை மீண்டும் வாயால் சொல்லுவார். ஆசிரியர் சொல்லும் சொற்களைக் கேட்டுக் (Dictation), குழந்தைகள் தங்களது சிலேட்டில் கீழேயுள்ளவாறு எழுதிக் காண்பிப்பர்.

கொக்கு  கோழி
குருவி  மைனா

இப்பொழுது, ஒவ்வொரு குழந்தையும் 4 சொற்களைப் பார்த்து வாசித்துக் காட்டும்; பார்க்காமல் எழுதிக் காட்டும்.

இதுதான், மழலையர் பள்ளிகளிலும், தொடக்கப் பள்ளிகளிலும் தமிழை இனிக்க இனிக்கக் கற்பிக்கும் முறை! அதாவது, ‘எதைக் குழந்தைகள் காதில் கேட்கின்றனரோ, அதைக் குழந்தைகள் வாசிக்க வேண்டும்; எதைக் குழந்தைகள் வாசிக்க முடியுமோஅதைத்தான் குழந்தைகளுக்கு எழுதக் கற்றுத் தர வேண்டும்.”

இதுதான், தமிழ்க் குழந்தைகள் தங்களது அமிழ்தினும் இனிய தமிழைக் கற்கும் இனிய முறையாகும். இம்முறையானது பேராசிரியர் கோகிலா தங்கசாமி தனது 20 ஆண்டுகால ஆய்வின் அடிப்படையில் உருவாக்கியது. இக்கற்பித்தல் முறைதான், இந்த நூற்றாண்டிலும் இனிவரும் நூற்றாண்டுகளிலும் இனிக்கத் இனிக்கத் தமிழைக் குழந்தைகள் கற்கும் முறையாகத் திகழும்!