தமிழ்நாட்டுக் குழந்தைகள் தமிழை வாசிப்பதில் மிகவும் பின்தங்கியுள்ளனர் என்றும், எட்டாவது படிக்கும் மாணவர்கள் கூடத் தமிழை வாசிக்கத் தடுமாறுகின்றனர் என்றும் அண்மைக்கால ஆய்வுகள் தெரிவிக்கின்றன. காரணம்? தவறான கற்பித்தல் முறை!
பெரும்பாலான தொடக்கப்பள்ளிகளில், குறிப்பாக ஆங்கிலவழி மழலையர் தொடக்கப்பள்ளிகளில், ஆசிரியர்கள் சரியான நுட்பங்களைப் பயன்படுத்திக் குழந்தைகளுக்கு வாசிக்கக் கற்றுத் தருவதில்லை.
வாசித்தல் என்பது மொழித்திறன்களில் மிகவும் நுட்பமான செயல். “இராக்கெட் அறிவியலில் (Rocket Science) எவ்வளவு நுட்பம் உள்ளதோ அந்த அளவுக்கு வாசிப்பதிலும் உள்ளது” என மேனாட்டு அறிஞர் லூயிசா மோட்ஸ் (Louisa Moats) குறிப்பிடுகிறார்.
படங்களைக் காண்பித்து எழுத்துகளைச் சொல்லித்தரும் முறை ஆங்கிலேயர்களுடைய கற்பித்தல் முறை. ஆங்கில மொழியில் 26 எழுத்துகள் உள்ளன. ஓர் எழுத்துக்கு ஒரு படம் என 26 படங்களைக் காண்பித்து ஆங்கிலத்தைக் கற்றுத் தருவது எளிது.
ஆனால், தமிழில் 247 எழுத்துகள் உள்ளன. அத்தனை எழுத்துகளுக்கும் படங்களைக் காண்பித்துக் குழந்தைகளுக்குத் தமிழைச் சொல்லித்தர இயலுமா? இயலாத காரியம்!
ஆங்கில எழுத்துகளைக் கற்பிக்க படங்களை காண்பிப்பது போலத் தமிழுக்கும் படங்களைக் காண்பித்து வாசித்துக் கற்றுக்கொடுத்ததின் விளைவுதான், இன்று நம் குழந்தைகள் தாய்மொழியை வாசிப்பதற்குத் திணறுகின்றனர்.
உண்மையில், தமிழனின் கற்பித்தல் முறை எது தெரியுமா? கேட்டல்! கேட்டல் வழியே கற்றல்! “கற்றலில் கேட்டலே நன்று” என்பதுதான் தமிழனின் கற்பித்தல் முறை! எழுதிக் கற்பது அல்ல!
சிறிய எளிய வாக்கியங்களைக் காதால் கேட்பதும், காதில் கேட்டதைத் திரும்ப திரும்பச் சொல்வதும்தான், குழந்தை ஒரு மொழியைக் கற்கும் இயல்பான முறை! இந்த முறையைக் குழந்தைகளுக்குத் தமிழை வாசிக்கக் கற்பிக்கும்போது நமது ஆசிரியர்கள் பயன்படுத்தத் தவறிவிட்டனர்.
தமிழ் மூதாட்டி அவ்வையார் ஆத்திசூடியில், “அறம் செய விரும்பு – ஆறுவது சினம் – இயல்வது கரவேல் – ஈவது விலக்கேல்…” என வாழ்வியல் நெறிக் கருத்துக்களைச் சிறிய வாக்கியங்களாகச் சொல்லி, தமிழ் எழுத்துக்களைச் சொற்களோடு கோத்துக் கற்பிக்கிறார்.
அவ்வையார் தனது கருத்துக்களைக் கற்பிக்க அச்சடித்த படங்களின் துணையை நாடவில்லை. நாடியிருந்தால் அவரால் ஆத்திசூடியைக் கற்பித்திருக்க முடியுமா? இன்று கூட, நம்மால் அச்சடித்த வண்ணமிகு படங்களை வைத்துக் குழந்தைகளுக்கு ஆத்திசூடியைச் சொல்லித்தர இயலுமா?
ஒன்று மட்டும் தெளிவு. தாய்மொழியை – தமிழை வாசித்துப் பழகுவதற்குப் படங்களைப் பயன்படுத்திக் கற்பிப்பதால் பெரும்பயன் ஏதுமில்லை. அப்படியானால், புத்தகங்களில் வண்ணமிகு படங்கள் உள்ளனவே! அவற்றின் பயன் என்ன? குழந்தைகள் புத்தகங்களைக் கையிலெடுத்துப் புரட்டிப் பார்க்கும் ஆர்வத்தைத் தூண்டுவதற்குத்தான் படங்கள். வெறும் படங்கள் மட்டுமே குழந்தைகளுக்கு வாசிப்பைத் தந்துவிடாது.
நுட்பமாக வாசிக்கக் கற்றுத் தருவது எப்படி?
குழந்தைகளுக்குச் சொற்களைக் கேட்பது பிடிக்கும். கேட்ட சொற்களைத் திரும்பச் சொல்வது பிடிக்கும். அம்மாவோ, ஆசிரியரோ சொல்லும் சொற்களைக் குழந்தைகள் மனம் விரும்பிக் கேட்கும். கேட்ட சொற்களை மீண்டும் சொல்வது பிடிக்கும். குழந்தைகளுக்கு எது பிடிக்குமோ, குழந்தைகள் எதை விரும்பிச் செய்வார்களோ, அங்கிருந்துதான் குழந்தைகளுக்கு வாசிக்கக் கற்றுத்தர வேண்டும்.
சிறந்த கற்பித்தல் என்பது குழந்தைகளின் இயல்புகளைப் புரிந்துகொண்டு அதற்கேற்றவாறு மொழியின் இயல்புகளைக் குழந்தைகளுக்குக் கற்றுத்தருவதாகும்.
எழுத்து என்பது சொற்களின் ஒலி வடிவம். ஒலியின் உரு அல்லது வடிவம்தான் எழுத்து. கண்ணால் பார்க்க இயலாத, காதால் மட்டுமே கேட்கக்கூடிய ஒலியின் வடிவமே எழுத்து.
எழுத்துகளின் ஒலிகளைக் காதால் கேட்கலாம்; கண்ணால் பார்க்க முடியாது. ஆனால், எழுத்துகளைக் கண்ணால் பார்க்க முடியும். காதால் மட்டுமே கேட்கக்கூடிய ஒலிகளை எழுத்து வடிவமாக்கி, அதைப் பார்த்துச் சொல்வதுதான் வாசிப்பு!
எழுத்தைப் பார்த்து அதை அப்படியே எழுதுவது எளிது. காதில் கேட்கும் ஒலியையும் அதற்குரிய எழுத்துகளையும் பொருத்திப் பார்த்துச் சொல்வதுதான் வாசிப்பு.
எழுத்தைப் பார்த்து எழுதுவது எளிது. ஆனால், காதில் கேட்கும் ஒலியை அதற்குரிய எழுத்துகளுடன் பொருத்திப் பார்த்துச் சொல்வது கடினம். அதனால்தான், வாசிப்பு என்பது எழுதுவதைவிடச் சிரமமான செயலாகத் தோன்றுகிறது.
பள்ளிகளில் குழந்தைகளுக்குக் கூடுதலான எழுத்துப் பயிற்சி தரப்படுகிறது. வாசிப்புப் பயிற்சி மிகக் குறைவாகவே வழங்கப்படுகிறது.
வாசித்துப் பழகப் பழகக் குழந்தைகளுக்கு எழுதுவது எளிதாகும். ஆனால், எழுதிப் பழகுவதால் அவர்களுக்கு வாசிப்பது எளிதாகி விடாது. “வாசித்தல் எழுதப் பழகுவதற்கு துணை செய்யும். ஆனால், எழுதுதல் வாசித்துப் பழகுவதற்கு பெரிதும் துணையாக நிற்காது” என்னும் உண்மையை ஆசிரியர்கள் புரிந்து கொண்டு, பள்ளிகளில் அதிகமான வாசிப்புப் பயிற்சியும் குறைவான எழுத்துப் பயிற்சியும் தர வேண்டும்.
ஐந்தாம் வகுப்பு முடிக்கும்போது, ஒவ்வொரு குழந்தையும் தெளிவாக வாசிக்க வேண்டுமானால் (Mastery Reading), இன்று பள்ளிகளில் பின்பற்றப்படும் “எழுத்துகளை எழுதிப் பழகுதல் – பின்னர் வாசித்துப் பழகுதல்” என்னும் இன்றைய கற்பித்தல் முறை முற்றிலுமாக மாற வேண்டும். புதிய நுட்பத்துடன் வாசிப்பைக் கற்றுத்தர வேண்டும்.
புதிய நுட்பத்துடன் குழந்தைகளுக்கு வாசிப்புப் பயிற்சியை எவ்வாறு அளிப்பது?
எடுத்துக்காட்டாக, ‘மாம்பழம்’ என்னும் சொல்லை ஒரு குழந்தை வாசித்துப் பழக வேண்டும் என வைத்துக்கொள்வோம். முதலில், ஆசிரியர் ‘மாம்பழம்’ என்னும் சொல்லை – அதன் ஒலியைச் சொல்ல, அதைக் குழந்தை தன் காதால் கேட்க வேண்டும். ஆசிரியர்
“மா-ம்-ப-ழ-ம் மாம்பழம்” என வாயால் எழுத்துக்கூட்டிச் சொல்லுவதைக் குழந்தை தன் காதால் கேட்டு, ஆசிரியரைப் போலவே, குழந்தையும் “மா-ம்-ப-ழ-ம் மாம்பழம்” என வாயால் எழுத்துக்கூட்டிச் சொல்ல வேண்டும்.
குழந்தை “மா-ம்-ப-ழ-ம்” என்னும் சொல்லிலுள்ள எழுத்துகளின் ஒலிகளைக் கற்ற பின்னரே, ஆசிரியர் அச்சொல்லின் ஒலிக்குரிய எழுத்துகளை குழந்தைகளிடம் எழுதிக் காண்பித்து வாசித்துக்காட்ட வேண்டும்.
குழந்தை தனது வாயால் “மா-ம்-ப-ழ-ம் மாம்பழம்” என எழுத்துக்கூட்டிச் சொல்வதற்கு முன், உண்மையான மாம்பழத்தைக் காண்பிப்பதும், மாம்பழத்தின் படத்தைக் காட்டுவதும் வாசிப்பதற்கு உதவாது. ஒருவேளை, அது வாசிப்பதற்கான ஆர்வத்தை வேண்டுமானால் குழந்தைகளிடம் ஏற்படுத்தலாம்.
“வாசிப்பு என்பது குழந்தைகள் எழுத்துகளைப் பார்த்து எழுதுவதில் தொடங்காமல், அவர்கள் சொற்களைக் காதால் கேட்டு தங்கள் வாயால் எழுத்துக்கூட்டிச் சொல்வதில் தொட ங்குகிறது” என்னும் நுட்பத்தைப் புரிந்துகொண்டு, அந்த நுட்பத்தின் அடிப்படையில் மழலையர் தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் குழந்தைகளுக்கு வாசிக்கக் கற்றுத்தர வேண்டும்.
பள்ளிகள் எழுத்துகளை எழுதுவதற்குக் கற்றுத்தர வேண்டுமா?
தமிழில் ஒலிகள் மாறாதவை; எழுத்து வடிவம் மாறி வருவன. தொல்காப்பியர் காலத்திலிருந்து இன்று வரையில் தமிழ் எழுத்துகளின் ஒலிகள் மாறவில்லை. ஆனால், எழுத்துகளின் வரிவடிவம் பிராமி எழுத்துகள், வட்டெழுத்துகள் என மாறிக்கொண்டே வந்துள்ளது.
அன்று ‘அம்மா’ என்னும் சொல்லைத் தமிழன் எப்படி உச்சரித்துச் சொன்னானோ, அப்படியேதான் இன்றுவரையிலும் சொல்லி வருகிறான். ஆனால், ‘அம்மா’ என்பதின் எழுத்து வடிவம் இன்று இருப்பது போல அன்று இல்லை. காலந்தோறும் தமிழின் எழுத்து வடிவங்கள் மாறி வந்துள்ளன.
அன்று, மன்னர்கள் கல்வெட்டில் பொறித்த எழுத்துகளை இன்று நம்மால் வாசிக்க இயலாது. அதைத் தொல்லியல் துறை வல்லுநர்கள் மட்டும்தான் வாசிக்க முடியும்.
தொழில் நுட்ப வளர்ச்சியின் காரணமாக, அடுத்த 20 ஆண்டுகளில் குழந்தைகள் எழுதுவற்குக் கணிப்பொறியில் மின்னுரு எழுத்துகளைப் பயன்படுத்துவார்கள்; கையால் எழுதமாட்டார்கள். பிறகு ஏன் எழுத்துப் பயிற்சி? ஏன் ‘எழுது, எழுது’ எனச் சொல்லிக் குழந்தைகளின் கைகளை ஒடிக்க வேண்டும்?
விரைவில், பேனாவையும் பென்சிலையும் பிடித்து எழுதும் எழுத்துப் பயிற்சிகள் மறைந்து போய்விடும். ஆனால், குழந்தைகள் கணிப்பொறிக் கருவிகளில் வாசிப்பதும் படித்து மகிழ்வதும் தொடர்ந்து நிகழும். அதற்கு, நமது பள்ளிகளில் இன்றிலிருந்தே நுட்பமான முறையில் நம் தமிழ்க் குழந்தைகளுக்கு அமிழ்தினுமினிய தமிழை அவர்கள் மனம் விரும்பும் வகையில் சுற்றுத்தர வேண்டும்.
பள்ளிகளில் குழந்தைகளைத் தெளிவாகத் தமிழை வாசிக்க வைப்பதும், அவர்களது வாழ்நாள் முழுவதும் தமிழைச் சுவாசிக்க வைப்பதும் நமது கடமை. அதற்கான முயற்சிதான் ‘தமிழா..! தமிழ் படி..! என்னும் இந்நூல்! துணைவேந்தர் கோகிலா தங்கசாமி அவர்களால் நுட்பமான முறையில் எழுதி வடிவமைக்கப்பட்டுள்ள இந்நூல், இந்த நூற்றாண்டிலும் இனிவரும் நூற்றாண்டுகளிலும், தமிழை ‘மணக்க மணக்க’ வாசித்து மகிழ உதவும்! தெருவெங்கும் தமிழ் மணக்கச் செய்வோம்!